Monday, April 17, 2006

வட்டார, ஜாதி, மதத் தமிழில் பேசுவதை தவிர்க்கவேண்டும்

தமிழ் மொழியானது பல வட்டார வழக்குகளின்படி பல ஊர்நகரம்
இனம்தொழில் இடவமைப்பின்படி பேசப்பட்டு
வருகின்றது.

தமிழர்கள் பலவகைகளில் கண்டிப்பாக காலத்திற்கேற்ப மாறவேண்டும்
என்பதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன்

அதில் இதுவும் ஒன்று

அதாவது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள்
தூயதமிழிலேயே பேசவேண்டும்
தூயதமிழ் என்றால் என்ன ?
சாதாரண , பாடப்புத்தகம் மூலம் அறிந்த "எழுத்தில் எழுதப்படும்" இலக்கணத் தமிழ் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கக்கூடாது

வட்டாரத் தமிழ்
ஜாதித் தமிழ்
மதத்தமிழ்

ஆகிய (தான் பேசுவதைக் கேட்பவர் தான் எந்த ஊரையோ, ஜாதியையோ, மதத்தை சேன்றவரோ என்று பறைசாற்றவேண்டும் என்கிற எண்ணத்தை அது வரும்போதெல்லாம் எடுத்துவிடவேண்டும்)

ஒரு காலத்தில் மக்கள் இடப்பெயர்ச்சி, மக்கள் கலப்பு இல்லாத காலத்தில்
வட்டார, மத, ஜாதித் தமிழ் மேலோங்கி இருந்தது.

வீட்டார்கள் அவ்வாறு பேசுவதையும் ஊக்குவித்தும் வந்தனர்.

இக்காலத்தில் கேபிள் டிவி எல்லா பட்டி தொட்டியிலும்
பரவியிருப்பதால். செய்தி அறிவிப்பாளரின் தகுதரப்பட்ட தமிழ் எங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது

ஆகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த உயரிய பொறுப்பை உணர்ந்து
நல்ல தமிழில் செய்தியை எழுதி
முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும்

இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்

ஒரு காலத்தில் நான் சொல்வேன்

நான் மத்திய மாவட்ட(திருச்சி) தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான்
ஆனால் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன்
ஏன்

1. ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பேச்சு மூலம் அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். தமிழர்கள் கூடுமானவரை ஜாதிப்ற்று, வட்டாரப் பற்று, மதப் பற்று ஆகியவற்றை வீட்டை தாண்டி வெளியே காட்ட முயற்சிக்கக்கூடாது என்பது என் விருப்பம்.

ஆகவே ஆங்கிலத்திலேயே உரையாடல் செய்தால் இவற்றையெல்லாம்
தவிர்க்கமுடியும்.

2. மேலும் மூன்றுவிதத் தமிழ் (ஆனால் பணிவன்பான தமிழ் பேசாமல்) பேசுவது எனக்குப் பிடிக்காது

வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

எல்லோரையும் (சின்ன குழந்தைகளை, வேலைக்காரர்களைக் கூட வாங்க
என்று எப்போதும் அழைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?

3. மூன்றாவது காரணம் தற்கால வெளிப்பாட்டுக்குத் தேவையான
வார்த்தைகள் தமிழில் இல்லாததால் பலர் ஆங்கிலத்தை சரளமாக
தங்கள் தமிழில் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்கள்.

(சினிமாக்காரர்களின், விளையாட்டு வீரர்களின் , வணிகர்களின்
பேட்டியைக் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் பண்ணி (பன்னி) த் தமிழிலியே பேசி தமிழ் நாட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்?)

அதாவது பண்ணி என்கிற வினைச்சொல்லை மாத்திரம் தமிழில்
சொல்லி மற்றெல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் சொல்லி
பேசும் விதம் தான் பண்ணித் தமிழ் (வேடிக்கைக்காக பன்னி) என்பது

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் இதையெல்லாம் தவிர்க்கமுடியும்
இல்லையா?

இண்டி ராம்

8 comments:

வெளிகண்ட நாதர் said...

இந்த பண்(ன்னி)ணி தமிழ், ரொம்ப வேடிக்கையானது தான்!

Floraipuyal said...

//
ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும்.
//

மறுபடியும் நீங்க அதயே எழுதியிருக்கிறதால, நானும் அதே மறுமொழியப் பதிக்கிறேன். :)

என்ன பேசுறிங்கன்னு என்னோட சித்தறிவுக்கு வெளங்கல. நான் இயல்பா பேசுறது போலவே இப்போ எழுதிருக்கேன். தமிழகத்தில இருந்த வரை நான் என்னோட பெறந்த ஊரத் தவிர்த்து வேற எங்கேயும் போனதில்ல. என்னுடய பேச்சிலருந்து நான் என்ன மதம், எந்த ஊரச் சார்ந்தவன், என்ன சாத்தினு உங்களால சொல்ல முடியுமா? ஆச்சரியமா இருக்கு. அஞ்சு வார்த்தயில்ல அம்பது வார்த்த பேசினாலும் எளிதா கண்டுபிடிக்க முடியாதுங்கிறது என்னோட எண்ணம். நீங்க எப்படி கண்டுபிடிக்கிறீங்கன்னு சொன்னா நானும் கத்துக்க ஏதுவா இருக்கும்.
நன்றி வணக்கங்கள்.
மணிவண்ணன்.

ram said...

நேருக்கு நேராக உங்களுடன்
பேசினால் தான் உங்களது
ஜாதி, மதம், வட்டாரத் தொடர்புகளை
யூகிக்கமுடியும்.

எப்போதாவது உங்களைச் சந்திக்க நேர்ந்தால் செய்து பார்ப்போம்

இண்டி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வட்டாரத் தமிழ் தவறு கிடையாதுங்க. இராம. கி அவர்களின் பதிவைப் போய் பாருங்க. இன்று எழுத்து வழக்கில் அருகி வரும் பல அருமையான தமிழ்ச் சொற்களை வட்டார வழக்குகளில், குறிப்பாக கிராமங்களில், அடையாளம் காணலாம். ஒவ்வொரு வட்டாரத் தமிழுக்கும் ஒரு இனிமையும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு, கொங்குத் தமிழ். dialects எல்லா உலக மொழிகள்லயும் இருக்கிறது தான். இதை அழிக்கவோ homegenise பண்ணவோ எந்தத் தேவையும் இல்லை. ஒருவரின் பேச்சை வைத்து நீங்கள் வட்டாரத்தைக் கண்டுபிடித்தாலும் அது ஒன்னும் பெரிய பிரச்சினையில்லையே? சாதியைச் சொல்லத் தயங்கி தங்கள் சாதி சார் பேச்சை வேண்டுமானால் ஒரு சிலர் தாங்களாகத் தவிர்க்கலாம். ஆனால், ஒரு சில சாதிகளைத் தவிர்த்து பிற சாதிகளுக்கு என்று தனித்த பேச்சு வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மொழியில் வரும் வட்டார, மதம், சாதி அடையாளங்களை அப்படியே விடுவதைக் காட்டிலும் அழிக்க முற்பட்டால் தான் வலுவான எதிர்வினைகள், தேவையில்லாத பிரச்சினைகள் கிளம்பும்.

//இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்//

ஆங்கிலத்துக்கே uk, us, canada, australiaன்னு பல வகைகள் இருக்கு..தமிழுக்கு இருக்கக்கூடாதா?

//2. மேலும் மூன்றுவிதத் தமிழ் (ஆனால் பணிவன்பான தமிழ் பேசாமல்) பேசுவது எனக்குப் பிடிக்காது

வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.//

ஏங்க இது எல்லாம் ஒரு பிரச்சினையா? நீங்க எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசினா அதைப் பார்த்து குழந்தையும் கத்துக்கும். குழந்தை உட்பட அனைவரையும் வாங்க போங்கன்னு அழைக்கும் வழக்கம் இலங்கைத் தமிழரிடமும் தமிழ்நாட்டிலும் ஒரு சிலரிடமுமாவது உண்டு. வாம்மா, வாப்பா, வாய்யா, வாடா என்று அழைப்பதிலும் ஒரு சுகம், வாஞ்சை உண்டு. அதை விட்டுவிடத் தேவை இல்லை.

3. பண்ணித் தமிழால் கொலை செய்வதை விட ஆங்கிலம் பேசலாம் என்பது சரி. ஆனால், அதுவே காலத்துக்கும் தமிழைத் திரும்பிப் பார்க்க வைக்காமல் இருந்தால் சரி

Sundar Padmanaban said...

இண்டி ராம்!

//அதாவது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள்
தூயதமிழிலேயே பேசவேண்டும்
தூயதமிழ் என்றால் என்ன ?
சாதாரண , பாடப்புத்தகம் மூலம் அறிந்த "எழுத்தில் எழுதப்படும்" இலக்கணத் தமிழ் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கக்கூடாது//

நான் அறிந்த வரையில் எல்லா மொழிகளிலும் - ஆங்கிலம் உட்பட - பேச்சு வழக்கு உண்டு. ஆங்கிலம் பேசும் தேசங்களிலேயே வட்டார வழக்குகள் உண்டு. பிரிட்டிஷ் ஆங்கிலமும் அமெரிக்க ஆங்கிலமும் வட்டார வழக்கில் மாறுபடுகின்றன. அமெரிக்காவிலேயே டெக்ஸாஸ் ஆளும் பாஸ்டன் ஆளும் பேசுவதைக் கேட்டால் வித்தியாசத்தை உணரமுடியும். இதேபோல் சிரியாவில் பேசப்படும் அரபிக்கும் சவுதி, துபாய் இவற்றில் பேசப்படும் அரபிக்கும் வட்டார வழக்கு வித்தியாசம் உண்டு. துபாயில் 'Aiwa' சிரியாவில் 'ஏ' - 'ஆமாம்' 'ஓம்'.

நீங்கள் சொல்லும் தூய'மொழி' பேச்சு வழக்கில் சாத்தியமே அல்ல.

//ஜாதித் தமிழ்// - அப்டீன்னா? ஓ நீங்க 'அவாள்' 'இவாள்' போன்ற ஜாதித் தமிழைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். 'அகம்' 'ஆம்' ஆக மருவுவதும் 'வீடு' 'ஊடு'ஆக மருவுவதும் ஒரு வகையில் வட்டார வழக்கு மொழிதான். மதுரையில் தலைமுறைகளாகத் தங்கியிருக்கும் மார்வாரிகளின் தமிழைக் கேட்டுப் பாருங்கள். நிறைய அவர்கள் மொழி வார்த்தைகள் புழங்கும். தமிழ்நாட்டில் தலைமுறைகளாக இருக்கும் - தெலுங்கு கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் - மக்களைப் பாருங்கள். அவர்கள் பேசும் தாய்மொழியில் தமிழ் வார்த்தைகள் ஏராளமாகக் கலந்து பேசுவார்கள். இதில் விபரீதம் எதுவும் விளையப் போவதில்லை.

//மதத்தமிழ்// இது புரியலைங்க.

//செய்தி அறிவிப்பாளரின் தகுதரப்பட்ட தமிழ் எங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது//

கிண்டல்தானே பண்றீங்க. தமிழ்நாட்டின் ஊடக அறிவிப்பாளர்களில் சி(ப)லர் பேசும் தமிழுக்கு நீங்கள் சொன்ன வட்டார, ஜாதி, மதத் தமிழ் எவ்வளவோ மேல்.

//ஆகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த உயரிய பொறுப்பை உணர்ந்து
நல்ல தமிழில் செய்தியை எழுதி
முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும்//

முக அழகி என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்? அதாவது எல்லாப் பொருட்களையும் நிறுவனங்கள் பெண்களைக் காட்டி சந்தைப்படுத்துவது போன்று தமிழையும் பெண்களைக் காட்டிச் சந்தைப்படுத்தச் சொல்கிறீர்கள் - சவாசு!

//இதைத் தான் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செய்து வருகின்றனர்//

எதை?

//ஆனால் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன்
ஏன்

1. ஒருவர் தமிழில் என்னிடம் பேசினால் அவர் பேசும் நாலே வார்த்தைகளில்
அவரின் ஜாதியையும், மதத்தையும், வட்டாரத்தையும், படிப்பளவையும்
என்னால் அறிந்துகொள்ளமுடியும். என்னையும் என் பேச்சு மூலம் அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவார்கள். தமிழர்கள் கூடுமானவரை ஜாதிப்ற்று, வட்டாரப் பற்று, மதப் பற்று ஆகியவற்றை வீட்டை தாண்டி வெளியே காட்ட முயற்சிக்கக்கூடாது என்பது என் விருப்பம்.//

ஏனுங்க. நீங்க தூய தமிழ்ல பேசலாமே?

இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தை வைத்து அவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிடமுடியும் என்று சொல்கிறார்களே - அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

//ஆகவே ஆங்கிலத்திலேயே உரையாடல் செய்தால் இவற்றையெல்லாம்
தவிர்க்கமுடியும்.//

தேவுடா தேவுடா!

//வாடா, வாப்பா, வாம்மா, வாங்க, வாங்க சார், வாய்யா, வா அப்படின்னு பேசினால் தமிழ் கற்பவர்களுக்கு யார் யாரிடம் இம்மாதிரி வெவ்வேறு வினைச்சொல் பயனித்து பேசுவது என்பது குழப்பமான பிரச்சனையை உருவாக்குகிறது//

நானும் தமிழ் கற்றவன்தான். எனக்கு எந்தக் குழப்பமும் நேரவில்லையே?

//வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு இது பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள்.//

தவறான தகவல்.

//எல்லோரையும் (சின்ன குழந்தைகளை, வேலைக்காரர்களைக் கூட வாங்க
என்று எப்போதும் அழைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?//

இது அருமையான யோசனை. ஆனால் எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

//மூன்றாவது காரணம் தற்கால வெளிப்பாட்டுக்குத் தேவையான
வார்த்தைகள் தமிழில் இல்லாததால் பலர் ஆங்கிலத்தை சரளமாக
தங்கள் தமிழில் பேச்சில் பயன்படுத்தி வருகிறார்கள்.//

தமிழ் தெரியாமல் ஆங்கிலத்தையும் அரைகுறையாகப் படித்து தமிங்கலத்தில் பேசி ஒழிந்து போய்க் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சரி. மற்றபடி தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும் முயற்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னும் முனைப்பாகச் செயல்படவேண்டும் என்றுவேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி சாதாரண மக்களின் 'வெளிப்பாட்டுக்கும்' 'பயன்பாட்டுக்கும்' தமி்ழில் வார்த்தைகள் இல்லை என்பது உச்சக்கட்ட நகைச்சுவை.

//(சினிமாக்காரர்களின், விளையாட்டு வீரர்களின் , வணிகர்களின்
பேட்டியைக் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் பண்ணி (பன்னி) த் தமிழிலியே பேசி தமிழ் நாட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்?)//

இது மொழியின் குறையல்ல. அரைகுறை மனிதர்களின் குறை. தமிழை ஒழுங்காகக் கற்றால் இந்தப் பிரச்சினையில்லை.

//அதாவது பண்ணி என்கிற வினைச்சொல்லை மாத்திரம் தமிழில்
சொல்லி மற்றெல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் சொல்லி
பேசும் விதம் தான் பண்ணித் தமிழ் (வேடிக்கைக்காக பன்னி) என்பது//

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு மரத்தடியில் இதைப்பற்றி விவாதித்தது நினைவுக்கு வருகிறது. பண்ணித்தமிழ் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது.

//முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் இதையெல்லாம் தவிர்க்கமுடியும்
இல்லையா?//

முடியாது.

உங்கள் எண்ணங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று. எங்கள் கருத்தையும் சொல்லலாமல்லவா?

நன்றி.

Sundar Padmanaban said...

//முக அழகிகளால் படிக்கவைக்கவேண்டும//

வேகமாகப் படித்துக் கொண்டு வருகையில் இதை 'முக அழகிரியால் படிக்க வைக்கவேண்டும்' என்று படித்துவிட்டு ஒரு நொடி அதிர்ந்து, பிறகு சுதாரித்துப் படித்தேன்! :-)

உண்மை said...

இவ்வளவு எழுதும் உங்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க ஆசைப்படுகிறேன்.

பார்ப்பனர்கள் மட்டும் ஏன் அவா ஆத்து பாஷையை பேசறா? கணவனை அண்ணா என்றும் எதிர்வீட்டுக் காரனை மாமா என்றும் மாமிகள் விளிக்க காரணம் என்ன?

எங்க டோண்டு சார் ஆத்திலும் இதே நிலைதான்!!!

Unknown said...

வட்டார மொழி வழக்கு தமிழுக்கு உள்ள ஒரு சிறப்பு. தமிங்கிலத்தில் பேசுவதை விட வட்டார வழக்கில் பேசுவது எவ்வளவோ மேல்!